தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுகவின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், அதிமுக அரசினை தரக் குறைவாக விமர்சித்ததற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாற்றாரை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்து சுதந்திரம். அதுவே தங்கள் ஆட்சியையும், தங்கள் கட்சியினரையும், சமூக வலைதளங்களில் நாகரீகமாக விமர்சித்தாலே, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, வழக்கு தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற திமுக-வினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும்போது, திமுகவினர் இன்னும் மாறவில்லை என்பது தெளிவாகிறது.
ஸ்டாலின், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் “எங்களுக்கு வாக்களித்தோருக்கும், வாக்களிக்காதவர் களுக்கும் நடுநிலையாக இருந்து செயலாற்றுவோம்” என்றார். திமுக-அரசு தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம், முதல் கையெழுத்திடுவோம் என்று கூறிய பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும் திமுக-அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ளவர்களின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்து சுதந்திரத்தின்படி, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, காவல் துறையை வைத்து, அரசை தரக் குறைவாக விமர்சிப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்கிறார்கள்.

இவ்வாறு, ஒரு தனியார் நிறுவன செய்தி தொலைகாட்சி உட்பட, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 120 அதிமுக உறுப்பினர்களிடம், சமூக வலைதளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்; இல்லையெனில் வழக்கு தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள். மேலும், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திமுக-வின் நடவடிக்கைகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதியப்பட்ட கருத்துக்களுக்காகவும் இப்போது வழக்கு போடப்படுகிறது. அப்போதே சட்ட நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்று நினைப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் நாட்டம் செலுத்திவரும் திமுக-அரசு இத்தகைய மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திமுக அரசின் இந்த அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாக சந்திக்கக்கூடிய வல்லமை அதிமுகவின் சட்டப் பிரிவிற்கும் உண்டு என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







