“காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக…

கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மோடி அரசு பொருளாதாரத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி கருப்பு அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது

” இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதே நேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம்.

நாட்டின் மிக முக்கியமான பிரச்னை வேலையில்லா திண்டாட்டம்.  ஆனால் மோடி அரசு அது பற்றி பேசுவதே இல்லை.  அவர்கள் 10 ஆண்டுகளை ஒப்பீடு செய்கிறார்கள்.  ஆனால் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சாதனைகளை பற்றி பேசுவதே இல்லை.  பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியைக்கூட வழங்கவில்லை.  பின்னர் அவர்கள் நிதி வழங்கினோம் ஆனால் செலவு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன. 2014ல் இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்ததன. தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருந்தன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.