தற்போது வரை வழக்கமான பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை வருவதன் காரணமாகவும் வார இறுதி விடுமுறை காரணமாகவும், நடப்பாண்டில் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் விற்பனை நிறைவு பெற்றுவிட்ட நிலையில், தட்கல் முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்ய ஏராளமானோர் திட்டமிட்டுள்ளனர்.
வழக்கம் போல விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணத்துடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுடைய அடுத்த தேர்வாக அரசு போக்குவரத்துக் கழகம் இருந்து வருகிறது. அதன்படி தொடர் விடுமுறையொட்டி, வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் தினசரி இயக்கப்படுகின்ற 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 2050 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் பிற முக்கிய மாநகரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளால் மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, வெவ்வேறு வழித்தடங்களில் இயங்கக்கூடிய பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.
தற்போது வழக்கமாக செல்லக்கூடிய 2100 பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முன்பதிவு நிறைவடைந்த பின் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது. இதுவரை, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல வழக்கமான பேருந்துகளில் 75 சதவீதம் முன்பதிவு நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 30 , அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பெரும்பாலானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். பண்டிகைக்குப் பிறகு மீண்டும் மக்கள் சென்னைக்கு திரும்பும்போதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.










