முக்கியச் செய்திகள் தமிழகம்

பொது இடங்கள், அரசு கட்டடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை நீக்க வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்

பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக
அகற்ற வேண்டும் என்று அரசு செயலாளர்கள், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசிய, மாநில நெடுஞ்சாலை பாலங்கள், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை,
கல்வித் துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அகற்றுதல் மற்றும் அழகுபடுத்துதல் தொடர்பாக நெடுஞ்சாலைகள் எனப்படுபவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கக் கூடியவை.

அவற்றையும் கடந்து ஒரு மாநிலம் அல்லது நாடு எந்த அளவுக்கு அழகியலுடனும், ஒழுங்குடனும் பராமரிக்கப்படுகிறது என்பதை உலகிற்கு காட்டும் காலக் கண்ணாடிகள் தான் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஆகும். ஆனால், நெடுஞ்சாலைகளையும், பிற அரசுக் கட்டிடங்களையும் அழகியலுடன் பராமரிப்பதில் நாம் வெற்றி பெறவில்லை என்பது தான் உண்மை.

சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்குடன் பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களின்
சுவர்களில் விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடை
செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகரத்தின் சுவர்களில் அழகான ஓவியங்கள்
வரையப்பட்டு வருகின்றன. நமது கலாச்சாரத்தை பிற மாநிலத்தவருக்கும், பிற
நாட்டவருக்கும் தெரிவிக்கும் வகையில் வரையப்படும் சுவர் ஓவியங்கள்
காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன.

அதேபோல், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் காரணமாக, சாலைகளின் அழகைக் கெடுத்த பதாகைகளுக்கும் கிட்டத்தட்ட முடிவுகட்டப்பட்டு விட்டது. ஆனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களை விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் சீரழிக்கும் கலாச்சாரத்திற்கு மட்டும் இன்னும் முடிவுகட்டப்படவில்லை.

சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள்…. அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

கட்சிகளுடன் போட்டி போடும் வகையில் திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் பொது இடங்களை அருவருக்கத் தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்றாலும், சென்னையிலிருந்து பெங்களூர்
உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் சென்றாலும் வாகனங்களில் பயணிக்கும்போது
சாலைகளின் ஓரங்களில் உள்ள இயற்கை அழகை ரசிக்க முடியவில்லை. மாறாக, சாலைகளில் இரு ஓரங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளிலும், தொடர்வண்டிப் பாதைகளின் மீதும் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பரங்களும், சுவரொட்டிகளும் ரசனையைக் கெடுக்கின்றன.

நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்கள் பல நேரங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன. பல நேரங்களில் சாலைகளின் வழிகாட்டு பலகைகளை மறைத்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இவை தேவையற்ற விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. இவை தடுக்கப்படாவிட்டால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும்.

பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களை அனுமதிக்கக் கூடாது என்று பல
தருணங்களில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எச்சரித்த பிறகும் இவை
தொடருவது தான் வேதனை ஆகும்.

பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வதையும், சுவரொட்டிகள் ஒட்டுவதையும் தடுக்கும் வகையில் 1959-ஆம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தவெளிப்பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டம் (Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அரசு சுவர்களில் விளம்பரம் செய்வோருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், இத்தகைய சட்டவிரோத விளம்பரம் செய்வது இந்த சட்டத்தை பயன்படுத்தி தடுக்கப்படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை என்று அந்தக் கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 8 வயது சிறுவன்

G SaravanaKumar

”வெற்றி கோப்பையை கையில் வாங்கும் போது கண் கலங்கினேன்”- நடராஜன்!

Jayapriya

”ஆதரவாளர்கள் விரும்பினால் தனிக்கட்சி தொடங்குவேன்”-மு.க.அழகிரி!

Jayapriya