பேருந்துகளில் இ- டிக்கெட் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்ஃப் என்ஜினியரிங் அமைப்பு இணைந்து தயாரித்த இ – டிக்கெட் செயலி அறிமுக விழா நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு செயலியை அறிமுகம் செய்தார். விழா மேடையில் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது போக்குவரத்து துறை சார்பாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என கூறியிருந்தேன். அதில் இ-டிக்கெட் முறையும் ஒன்று. அதைத்தான் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்திருக்கிறார்கள்” என்றார்.
இ- டிக்கெட்டுக்காக CARD மற்றும் VALLET முறைகளில் பயன்படுத்துவதைப் பற்றி மாணவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், “புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவது பற்றி மக்கள் நினைப்பதை இந்த அரசு செய்து வருகிறது. இ-டிக்கெட் முறையில் உள்ள பல வகைகளை மாணவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்கள் தங்களது செயல்திறனை காட்டினால், முதலமைச்சருடன் கலந்தாலோசித்து மாணவர்களின் பங்களிப்புடன் கூடியதாக இ- டிக்கெட் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது” என்று தெரிவித்தார்.மாணவர்களின் சிந்தனைகள் அரசின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்றும், சென்னையில் இயங்கும் அரசு பேருந்துகளுக்கு பெண்களின் பாதுகாப்பிற்காக ஜிபிஎஸ் சிஸ்டம் மற்றும் அலாரம் பொருத்துவது குறித்தும் முடிவெடுத்து வருகிறோம் எனவும், தற்போது, 500 பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.