சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டியில் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்திய செஸ் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா ரூ. 9 கோடியில் நடைபெறவுள்ளது. போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்க இருக்கிறது. அதோடு, போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக ரூ. 92 கோடி ஒதுகீட்டு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
விளையாட்டு மையங்கள் அமைக்க ரூ. 5 கோடியும், கொரனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ. 84 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்குவதற்காக 2,700 அறைகள், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செஸ் போட்டியின் தொடக்கவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டலின், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ளவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement: