“தொடரும் கைதிகள் தப்பியோட்டம்!” – தவெக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

மதுரை நீதிமன்றத்தில் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் தொடரும் கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜா என்ற கைதி தீர்ப்பு நாளில் காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியதாகக் கூறப்படும் செய்தி சிறைத்துறையின் அலட்சியத்தினை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறுவது, தவெக ஆட்சியில் காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையே அம்பலப்படுத்துகிறது.

குற்றம் நிரூபிக்கப்படாத அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் லாக்கப் மரணம் கொண்டு செல்லும் காவல்துறையும், சிறைத்துறையும் குற்றவாளிகளை தப்ப விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொதுமக்களுக்கு காவல்துறையின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்திருக்கிறது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ‘வெற்றி’ எனப் பெயர் சூட்டும் தவெக அரசு, கைதிகள் தப்பியோடும் இந்தத் தொடர் சம்பவங்களுக்கும் ‘வெற்றி ஓட்டம்’ என்று பெயர் சூட்டிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.