சென்னையில் வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயிலில் மூலம் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்கள் மெட்ரோ ரயிலில் இருந்து வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல ஆட்டோக்கள், ஊபர், ஓலா கார் போன்ற சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் காத்திருந்து அரசின் மினி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களுடைய பயணத்தை எளிதாக்கும் விதமாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் எலக்டரிக் ஆட்டோ திட்டத்தை தொடங்கியுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் 5 கிலோ மீட்டர் வரையில் வழங்கப்படும் இந்த சேவையை லெக்கோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்திவருகிறது.
முதற்கட்டமாக ஆலந்தூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் மதுரவாயலில் மொத்தம் 28 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மாதம் முழுவதும் பயணிப்போருக்கு 20 சதவிகித கட்டண சலுகையும், கூகுள்பே, போன்பே மூலம் செலுத்துவோருக்கு 10 சதவிகித சலுகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இந்த திட்டம் மதுரவாயல் பைபாஸில் உள்ள ஒரு பெரிய குடியிருப்புக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








