கனமழை :  திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை…

கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.  நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேடை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக  அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் திருப்பத்தூர்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட  ஆட்சித்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். எனினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை, திருப்போரூர் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.  பூந்தமல்லி, முல்லா தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் கழிவுநீருடன் கலந்த மழைநீர் உள்ளே சென்றதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கழிவுநீர் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.