2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒருங்கிணைந்த அதிமுக கூட்டணியின் தேவையும், டி.டி.வி தினகரன் எடுத்துள்ள நிலைப்பாடும் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையில், கடந்த 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேட்சையாக களமிறங்கி டிடிவி தினகரன் அதிமுக, திமுக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தார். அடுத்த சில மாதங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். இந்த கட்சி 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 5 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2021ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 171 தொகுதிகளில் போட்டியிட்டு 2.36 சதவீதம் வாக்கு பெற்றது.
திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி என்று டிடிவி தினகரன் அறிவித்தார். இதையடுத்து அமமுக, விகே சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என பிரிந்து கிடக்கும் அதிமுக ஒருங்கிணைய உள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று கூறி கதவை சாத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. நாங்க ஒன்னும் கூட்டணி அமைக்கனும்னு அவர்ட்ட நிக்கல. அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி
பழனிச்சாமியுடன் சேர வாய்ப்பில்லை என்று பதில் சொல்லியுள்ளார் டிடிவி தினகரன்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்றுபட்டு நின்றிருந்தால் 3வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும். அந்த வரலாற்று வாய்ப்பை தவற விட்டனர் என்கிற ஆதங்கம் ஒருபக்கம் இருக்க, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் கருத்துகள் அதிமுக அனுதாபிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், பொதுத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுக்கு இன்னும் ஒராண்டு காலம் இருக்கு. அதுக்குள்ள கட்சிய மேலும் பலப்படுத்துவோம் என்கிற முடிவை எடுத்துள்ளார் டிடிவி தினகரன். இதன்படி கட்சியின் ஒவ்வொரு அணியின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியும் வருகிறார் என்கிறார்கள்.
குறிப்பாக, அமமுக தனித்து இயங்கும் அரசியல் கட்சி என்கிற கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் வலிமையான தலைவர் இல்லாத நிலை உளளது என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது அதை நிரப்பும் வகையில், ஆளும் திமுகவிற்கு மாற்றாக வர வேண்டும். அதற்கு கட்சி இன்னும் வளர வேண்டும். நம் பலம் அறிந்தவர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்கிற நிலைப்பாட்டை தினகரன் எடுத்துள்ளார். அவரது பேச்சும் செயலும் இதைத்தான் சொல்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அமமுகவை தொடங்கிய போது உடனிருந்த மேலூர் சாமி, வெற்றிவேல் இருவரும் உடல் நலக்குறைவால் மறைந்து விட்டனர். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களால் விலகி விட்டனர். ஆனாலும் தொண்டர்கள் துணையுடன், இலக்கை அடையலாம் என்கிற நம்பிக்கையில், கட்சிப் பணியில் கூடுதல் கவனம் செலுத்தும் தினகரன், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள், தொண்டர்களை ஈர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள்.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக பெரிய கட்சி அந்த கட்சி தலைமையில்தான் கூட்டணி என்று அண்ணாமலையும் தெரிவித்துள்ளனர். ஆனால், வாக்கு வங்கி சிதறாத ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் டெல்லி விரும்புகிறது. அதற்கு வாய்ப்பில்லை என்பது போல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஆகையால் தான் தனி ரூட் எடுத்துள்ளார் டிடிவி தினகரன் என்கிறார்கள் மூத்த தலைவர்கள். மக்கள் செல்வர் என்று தொண்டர்களால் அழைக்கப்படும் டிடிவி தினகரன் தனித்து நின்று மக்கள் ஆதரவை பெறுவாரா? குக்கர் விசில் ஓங்கி ஒலிக்குமா ? பொருத்திருந்து பார்க்கலாம்.









