குடிபோதையில் தகராறு; பிரபல நடிகையின் சகோதரர் கைது

டீக்கடை உரிமையாளரைத் தாக்கி, காவல் நிலையத்திலும் குடிபோதையில் தகராறு செய்த நடிகை பாபிலோனாவின் சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை…

டீக்கடை உரிமையாளரைத் தாக்கி, காவல் நிலையத்திலும் குடிபோதையில் தகராறு செய்த நடிகை பாபிலோனாவின் சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை என்பவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சேர்மதுரை கடையிலிருந்தபோது அங்கு ஜீப்பில் வந்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் பணம் கேட்டு சேர்மதுரையுடன் தகராறில் ஈடுபட்டு, பணம் தர மறுத்த அவரை தாக்கியுள்ளார். பின்னர் கடையிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு, கல்லாவில் இருந்த 1500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேர்மதுரை அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியைப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையிலிருந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் காவல்துறையினரைத் தரக்குறைவாகப் பேசி காவல் நிலையத்திற்குள் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து விக்கியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 ரூபாய் பணம், 1 வீச்சு அரிவாள் மற்றும் ஜீப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். நடிகை பாபிலோனாவின் சகோதரரான விக்கி (எ) விக்னேஷ் குமார் விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனவும், அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட விக்கியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.