மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூ.2,381 கோடி மதிப்புள்ள 1.44 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்பட்டது.
டெல்லியில் போதை பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பெரும்பாலான போதைப்பொருள்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் வழியாகத்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுவதால், எல்லைப்பகுதிகள்
வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்கு அனைவரும் ஓத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வீடியோ கான்பரன்சிங் மூலம், தேசிய
போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பல்வேறு மாநிலங்களின் செயல்பட்டு வரும் போதை பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து போதைப்பொருட்களை அமித்ஷா முன்னிலையில் அழித்தனர்.
அதன் படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (என்சிபி) ஹைதராபாத் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 6,590 கிலோவும், இந்தூர் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 822 கிலோவும், ஜம்மு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 356 கிலோவும் அழிக்கப்பட்டதோடு, மத்தியப் பிரதேசத்தில் 1,03,884 (1.03 லட்சம்) கிலோ, அசாமில் 1,486 கிலோ, சண்டிகரில் 229 கிலோ, கோவாவில் 25 கிலோ, குஜராத்தில் 4,277 கிலோ, ஹரியானாவில் 2,458 கிலோ, ஜம்மு காஷ்மீரில் 4,069 கிலோ, மகாராஷ்டிராவில் 159 கிலோ, திரிபுராவில் 1,803 கிலோ, உத்தரபிரதேசத்தில் 4,049 கிலோ என சுமார் ரூ.2,381 கோடி மதிப்புள்ள 1.44 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் அமைச்சர் முன்னிலையில் இன்று அழிக்கப்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா








