”போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் சொல்லக்கூடிய விஷயம் அல்ல” – நடிகர் கார்த்தி பேச்சு!

போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் தைரியமாக சொல்லக்கூடிய விஷயம் அல்ல, மாணவர்களுக்கு பெற்றோர்கள் தான் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்தார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர…

போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் தைரியமாக சொல்லக்கூடிய விஷயம் அல்ல, மாணவர்களுக்கு பெற்றோர்கள் தான் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக இன்று மெரினா கடற்கரையில் போதை பொருளை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பார்வைக்காக SAY NO TO DRUG என மணற் சிற்பம் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால், நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஈரோடு மகேஷ், கானா பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் தனது பெயரை பதிவு செய்தார். இந்த நிகழ்ச்சி மேடையில் நடிகர் கார்த்தி கூறியதாவது:

”போதை பொருட்கள் பழக்கம் பெருமையுடன் தைரியமாக சொல்லக்கூடிய விசயம் கிடையாது. வருங்கால மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மிக முக்கியம் அதை கவனித்தால் மற்றது தானாக குறைந்துவிடும். ஆனால் மாலை நேரங்களில் மாணவர்கள் வெளியே சென்று விளையாடுவதற்கு பதிலாக கை பேசியினை கொண்டு வீட்டிற்குள் முடங்குகின்றனர்.

போதை பொருட்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு பெரிய பின்னடைவை தருகிறது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் தான் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் தான் பிள்ளைகளை முழு கண்காணிப்பில் வைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.