வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வணிக வரித் துறையின் இணை ஆணையரிம் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் அக்ரோ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வணிக வரித் துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், முறையாக 4 கோடி ரூபாய் வணிக வரி கட்டவில்லை. எனவே, கையூட்டு பணம் 25 லட்சம் ரூபாய் அளித்தால் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றி விடுவதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அக்ரோ நிறுவன அதிகாரிகள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல் துறையினர் அறிவுறுத்தலின் பேரில் பணம் தருவதாக அக்ரோ நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். தி.நகரில் வைத்து பணம் தருவதாகக் கூறி வரவழைத்து அந்த நபரை பாண்டி பஜார் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் பெயர் வேலு என்றும், சைதாப்பேட்டை வணிக வரித் துறை அலுவலகத்தில் இணை ஆணையராகப் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரியிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிவதும் தெரியவந்தது. பண ஆசையால் இது போன்று வணிக வரி அதிகாரியாக நடித்து பணம் பறிக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயன்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








