சீனாவைத் தொடர்ந்து இந்தோனேஷியாவிலும் மோகன்லால் நடித்த ’த்ரிஷ்யம்’ படம் ரீமேக் ஆகிறது.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம், ’த்ரிஷயம்’. ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்தப் படம், மலையாளத்தில் வசூல் சாதனை படைத்தது. பின்னர், தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதையும் ஜீத்து ஜோசப்பே இயக்கி இருந்தார். இந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது.
இந்தப் படம் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடி-யில் வெளியானது. அதுவும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகமும் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் இப்போது இந்தோனேசியாவில் ’த்ரிஷ்யம்’ படம் ரீமேக் ஆகிறது. இதை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.







