முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அன்பின் சாரலில் நனைந்தேன் என தென்காசி பயணம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு ரயில் மூலம் இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, குற்றாலம் செல்லும் சாலையின் இருமருகிலும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து தென்காசி ரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
https://twitter.com/mkstalin/status/1600801497826021376
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிபீட்டிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதிகையில் புறப்பட்டு தென்காசி வந்தடைந்து, அம்மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் அன்பின் சாரலில் நனைந்தேன். 1,03,508 மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். ஆராதனா போன்ற குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசு என்ற பெருமையோடு பணியைத் தொடர்கிறேன் என பதிவிட்டு தென்காசி பயணம் குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.







