திராவிட மாடல் ஆட்சி; உதயநிதி ஸ்டாலின் புதிய விளக்கம்

திராவிட மாடல் ஆட்சி குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறையை…

திராவிட மாடல் ஆட்சி குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புதிய விளக்கம் கொடுத்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடத்த முதற்கட்டமாக 20 கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 20 என்ற எண்ணிக்கை 2,000 ஆக உயர வேண்டும் என்றும் திராவிட மாடல் என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கி மாநிலம் முழுவதும் அதை பரப்ப வேண்டும் கூறினார்.

மேலும் திராவிட மாடல் அரசுக்கு வித்திட்டவர் கருணாநிதி, தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தியவர், குறைந்தபட்ச ஆதார விலை, இலவச பட்டா, இலவச கல்வி, உதவித்தொகை, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது உள்ளிட்ட எண்ணற்ற சாதனைகளை செய்தவர் என்று உதயநிதி பெருமிதம் தெரிவித்தார் .

தொடர்ந்து பேசிய அவர், இங்கு பேசும் கருத்துகளை மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் கருத்தாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் 1,000 பேர், 1,500 பேர் என்று ஆட்களை கூட்டி நிகழ்ச்சியை நடத்த வேண்டியது இல்லை. 150 பேரைக் கூட்டியும் சிறியளவில் நிகழ்ச்சி நடத்தி திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்களை நடத்தலாம் என்றும் கூட்டம் நடத்துவதற்குண்டான ஏற்பாடுகளை இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக இளைஞரணிக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே, இதுதான் திராவிட மாடல் என்று தைரியமாக வகுப்பு எடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். மாநிலத்தின் தேவைகளை பட்டியலிட்டு வகுப்பு எடுத்தவர். இந்த துணிச்சல், தைரியம் தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்ற ஸ்டாலினின் வழியில் அனைவரும் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறி, அனைவரும் ஒற்றுமையாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன், வழக்கறிஞர் அருள்மொழி, எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.