பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ருட்டை 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 14வது முறையாக ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதேவேளையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் இது அவருக்கு 22வது பட்டமாகும். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் நேற்று விளையாடினர். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே நடால் புள்ளிகளை கைப்பற்றினார். இதனால், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் தன்வசப்படுத்தினார்.
இரண்டாவது செட்டில் பரபரப்பு காணப்பட்டது. காஸ்பர் ரூட் கடும் சவால் அளித்தபோதிலும் 6-3 என்ற செட் கணக்கில் அவர் அந்த செட்டையும் தன்வசப்படுத்தினார். ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டையும் நடால் கைப்பற்றினார்.
அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் உற்சாக மன நிலையில் காணப்பட்டார்.
ஆடவர் பிரிவில் அதிகமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரும் நடால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இடத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், செர்பியாவின் ஜோகோவிச்சும் உள்ளனர். முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்








