இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்துக்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு புதிய முயற்சியை மேற்கொண்டு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இதற்கான இணையதளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, அதிகாரிகள் உதயச்சந்திரன், கார்த்திகேயன், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள், ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நான் முதல்வன் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாணவர்களுக்கான திறன்களை, தொழிற்துறைக்கேற்ப மேம்படுத்துதல் போன்றவை குறித்து கல்லூரி முதல்வர்களுக்கும், தொழிற்துறையினருக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
#LIVE: நான் முதல்வன் – மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா https://t.co/yx5VjOLsoy
— M.K.Stalin (@mkstalin) August 29, 2022
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களை அறிவு, ஆற்றல், கல்வி, தனித்திறன் ஆகியவற்றில் தலைசிறந்து நிற்கவைக்கும் திட்டமே நான் முதல்வன். நான் மட்டுமே முதல்வனல்ல; அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே இத்திட்டம். இது என் கனவுத் திட்டம்.
அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி இதுவே திராவிட மாடல். இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க போட்டி போட்டுக் கொண்டு நிறுவனங்கள் முன்வருகின்றன. வளர்ந்து வரும் தொழிற்துறைக்கேற்ப நம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றவே நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.