முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தமிழ் மொழி, இனம், நிலப்பரப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் தேவை குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதன் ஆக்கப்பூர்வமான நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். இதை விட மிகவும் முக்கியம் தமிழர்கள் தங்களின் அடையாளங்களை இழந்து விடாமல் தடுப்பதற்கு உதவும் வகையில், பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை கட்டாயப் பயிற்று மொழியாக்க சட்டம் இயற்றுவது ஆகும்.

தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழார்வலர்களின் 30 ஆண்டு கால கனவு ஆகும். ஆனால், இந்த கனவு மட்டும் கைக்கெட்டாமல் தொடுவானம் போல விலகிக் கொண்டே செல்கிறது. அதற்குக் காரணம் தமிழை பயிற்றுமொழியாக்க எந்த அரசும் முழு மனதுடன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கூட அப்துல் கலாம், சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட அறிஞர்கள் தமிழ்வழியில் தான் படித்தனர். நானும் தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்தவன் தான். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் மட்டும் தான் ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, தாய்மொழியான தமிழ் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் அரசுகள் கவலைப்படவில்லை.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாளான நேற்று தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் தேசிய ஆட்சி மொழிகளாக அறிவிக்கச் செய்யப்போவதாக முதல்வர் கூறியுள்ளார். அவரது மொழியுணர்வு பாராட்டத்தக்கது. அந்த உணர்வு அவரது அடி மனதிலிருந்து எழுந்ததாக இருந்தால், முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழியை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கான இன்றைய அவசர, அவசியத் தேவையாகும்.

தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக்கும் சட்டம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு சட்டமான கல்வி பெறும் உரிமை சட்டத்தின் 29 (எஃப்) பிரிவில் , “நடைமுறைக்கு சாத்தியமான வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வாசகத்தில் ‘நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில்’ என்பதை மட்டும் நீக்கி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.


இந்த சட்டத் திருத்தத்தையும், தமிழை பள்ளி இறுதி வகுப்பு வரை படிப்படியாக கட்டாய பயிற்றுமொழியாக்கும் சட்டத்தையும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதன்மூலம் தமிழ் மொழி மீதான பற்றை திமுக அரசு நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

சூரப்பா ஓய்வுபெற்றாலும் விசாரணைக்கு வர வேண்டும்: விசாரணை ஆணையம்!

Ezhilarasan

டெல்லியில் கொரோனா தொற்று குறைகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

Hamsa

ஜோ பைடனின் பதவி காலம் வெற்றிக்கரமாக அமைய கடவுளை பிராத்திக்கிறேன்; அதிபர் ட்ரம்ப் கருத்து!

Saravana