வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது கட்டாயம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கு புதிய பிரைவசி பாலிசியை அந்நிறுவனம் சமீபத்தில் அமல்படுத்தியது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் தகவல்கள் சேமித்து வைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் சைதன்யா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இத்தகைய செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம் என்றும், இந்த செயலியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாட்ஸ் அப் மட்டுமல்லாமல், மேலும் பல குறுஞ்செய்தி செயலிகளுக்கும் இதுபோன்ற விதிமுறைகள் இருக்கும்போது, ஏன் இந்த செயலிக்கு எதிராக மட்டும் வழக்கு தொடுத்து இருக்கிறீர்கள் எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
வாட்ஸ்அப் செயலி புதிய விதிமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு உரிய விளக்கங்களை பெற அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







