இரட்டை இலை சின்னம் – எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று கூறி சூரியமூர்த்தி என்பவர்  தாக்கல் செய்த மனுவிற்கு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம்…

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று கூறி சூரியமூர்த்தி என்பவர்  தாக்கல் செய்த மனுவிற்கு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதையும் படியுங்கள் :  இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளன – ராகுல் காந்தி!

இந்நிலையில், உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

“அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன். உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது” இவ்வாறு சூரியமூர்த்தி தனது மனுவில் தெரிவித்தார்.

ஆனால், அவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனு வரும் மார்ச் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக சூரியமூர்த்தி என்பவர் அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.