வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் திருக்கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவில் 13-வது ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, நடு மாடு, சின்ன மாடு என 3- பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஜி. தும்மலப்பட்டியில் இருந்து வத்தலகுண்டு புறவழிச்சாலை 10-கி.மீ., போட்டியின் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் வத்தலகுண்டை சுற்றியுள்ள தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் முதலில் வரும் 3 மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் மூன்று இடங்களைப்பெற்ற 9 மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு கேடயமும், 3 பிரிவுகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தவர்களூக்கு முறையே ரூ.25001 , 20001, மற்றும் ரூ.7001- என ரொக்கப் பரிசுமும் வழங்கப்பட்டன.
மேலும், பீரோ, கட்டில், சேர் மற்றும் சைக்கிள் உள்ளிட்டவை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில், கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், நாட்டாண்மைகள் என பலரும் கலந்து கொண்டு பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.
—–சௌம்யா.மோ






