தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டம் முன்னேறும் மகளிருக்கான முகவரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
வேலை நிமித்தமாக நகரங்களை நோக்கி நகரும் மகளிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் தனியாரைக் காட்டிலும் குறைவான கட்டணத்தில் ஒரு நாள், மாத கணக்கில் தங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
ஒருவர் முதல் ஆறு பேர் வரை அறைகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார். நடேசனாரின் ‘திராவிடர் இல்லம்’ போல், தோழி விடுதிகள் திட்டமும் வரலாற்றின் பக்கங்களில் நிலைக்கொள்ளும் என கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








