மணிப்பூர் நிவராண முகாம்களில் எந்த வசதியும் இல்லை, அங்கு மக்கள் வாழும் விதமானது நம் மனதை உருக்கும் வகையில் உள்ளது என்று மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி பூலோ தேவி நேதம் கூறியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த கலவரம் மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2 மாதத்திற்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் , விதி 267ன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார். மாநிலங்களவையில் விவாதத்திற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே மாநிலங்களவை முடங்கியது. கடந்த வாரம் முழுக்க இரு அவைகளும் முடங்கின.
எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு 2 நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றது. மணிப்பூர் சென்றுள்ள எம்பிக்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்பி கவுரவ் கோகாய் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களை சந்தித்தனர்.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி பூலோ தேவி நேதம் மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் எம்.பி பூலோ தேவி நேதம் பேட்டியில் கூறியதாவது:
நிவராண முகாம்களில் எந்த வசதியும் இல்லை. ஒரு பெரிய அறையில் கிட்டத்தட்ட 400 முதல் 500 பேர் வரை தங்கியுள்ளனர். மணிப்பூர் அரசு அவர்களுக்கு பருப்பு சாதம் மட்டுமே வழங்கி வருகிறது, நாள் முழுவதும் குழந்தைகளுக்கு சாப்பிட வேறு எதுவும் வழங்கவில்லை. கழிவறை மற்றும் குளியலறை என எந்த வசதியும் அங்கு இல்லை. நிவாரண முகாம்களில் மக்கள் வாழும் விதமானது நம் மனதை உருக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு எம்.பி பூலோ தேவி நேதம் கூறியுள்ளார்.







