வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.
இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு.
இதையும் படியுங்கள் ; ‘ரிங்கு ஜக்கு’ | வெளியானது #Hitler திரைப்படத்தின் 3வது பாடல்!
இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ‘நவயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் வேள்பாரி நாவலின் கதையின் Reference சில திரைப்படங்களில் பயன்படுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது..
“அனைவரின் கவனத்திற்கு, பலரும் சு. வெங்கடேசனின் நாவலான ‘நவயுக நாயகன் வேள்பாரி’ யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு ட்ரெய்லரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன். நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.







