#TirupatiLaddu விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

திருப்பதி லட்டில் மாமிசங்களின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி…

#TirupatiLaddu Issue - Public Interest Litigation in Supreme Court!

திருப்பதி லட்டில் மாமிசங்களின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா தலைவரான சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை வழங்கியதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து மதத்தை அவமதித்திருப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் லட்டு பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு இந்து சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. இந்துக்களின் உணர்வுகள் மற்றும் மத உணர்வுகளை கொந்தளிக்க செய்துள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.