நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் நடத்தும் வேண்டாம் போதை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தை கையில் எடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும், பொதுநலமும் சார்ந்த செய்திகளை மட்டும் வழங்காமல் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் இந்த மாதம் முழுவதும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடக்கவிழா கடந்த 1-ம் தேதி சென்னையில் வைத்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வேண்டாம் போதை விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், சென்னை பாரிஸ் கார்னரில் அமைந்துள்ள சென்யிட் கொலம்பன் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி கலந்து கொண்டு மாணவர்களுடன் வேண்டாம் போதை என்ற உறுதிமொழியும் மற்றும் இதைப் பற்றிய விழிப்புணர்வு உரையையும் வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், உங்களை போன்ற மாணவர்களுக்கு இங்கு என்ன நடைபெறுகிறது என்று நன்றாக தெரியும் என்றார். உங்கள் ஒவ்வொருவருக்குள் நிறைய சக்தி உள்ளது என கூறினார்.
அதை வீண் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்ட அவர், எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும் மனம் செல்ல கூடாது என்றும், உங்கள் நண்பர்கள் ஆலோசனை கூறினாலும், உங்களுக்கு தன் ஒழுக்கம் கண்டிப்பாக தேவை. இப்பொழுது மட்டும் இல்லை வாழ்க்கை முழுவதும் வேண்டாம் போதையை கடைபிடிக்க வேண்டும்.. உங்களை போன்ற மாணவர்கள் தான் காவல் துறையின் கண்கள், எங்கு போதை பொருள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைப்பெற்றாலும் காவல் துறைக்கு கூற வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி இப்ரா கூறும்போது, வேண்டாம் போதை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு போதை பொருட்கள் எவ்வளவு தீங்கானது என்ற விழிப்புணர்வு தனக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








