நாடோடி மன்னன் நாடாளும் மன்னனான கதையை கூறும் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடலை எம்ஜிஆர் கூறியும் திருத்தம் செய்ய மறுத்தார் கவியரசு கண்ணதாசன்.
எம்ஜிஆரின் திரை வாழ்க்கை ஏறுவரிசையில் நகரத் தொடங்கிய நிலையில், மிகுந்த பொருட்செலவில், அவர் தயாரித்து இயக்கிய திரைப்படம் நாடோடி மன்னன். வெற்றிபெற்றால் மன்னன், இல்லையேல் நாடோடி என எம்ஜிஆரால் குறிப்பிடப்பட்ட திரைப்படத்தில் நாடோடியாகவும், மன்னனாகவும் எம்ஜிஆர் இருவேடங்களில் நடித்திருப்பார்.
பரபரப்புக்கு இடையில் தயாரிப்புக்கான செலவு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கவியரசு கண்ணதாசன். ஒருநாள் காலையில் படப்பிடிப்பிற்கு வந்து உரையாடலை எழுதித் தந்து விட கண்ணதாசனிடம் எம்ஜிஆர் கூற… மறுநாள் தாமதமாக காலை 9 மணிக்கு வரவேண்டிய கவியரசு, நண்பகல் 12 மணிக்கு வந்தார். அதே நேரத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம் பாடல் எழுத சொல்லியிருந்தார் எம்ஜிஆர். தாமதமாக வந்த கண்ணதாசனிடம் அந்தப்பாடலை படித்துப் பார்த்து, தேவையென்றால் வரிகளை மாற்றிக் கொள்ளலாம் என எம்ஜிஆர் கூற…. ‘பட்டுக்கோட்டை அண்ணன் எழுதிய பாடலை நான் மாற்றவே மாட்டேன்’ என பதறிப் போய் குறிப்பிட்டார் கண்ணதாசன். அப்படி உருவான பாடல்தான் தூங்காதே தம்பி தூங்காதே. இந்தப்பாடல் தனக்காகவே எழுதப்பட்டதாக சிலாகித்துக் கொண்டார் கண்ணதாசன்.
தயாரிப்பாளர் ஒருவரிடம் “காடு வெளஞ்சென்ன மச்சான்…” என்ற பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடிக்காட்ட, ஆர்.எம். வீரப்பனுக்குப் பிடித்துப் போனதால் எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்த, நாடோடி மன்னனில் அந்தப் பாடல் இடம் பெற்றது.
1958ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி நாடோடி மன்னன் திரைப்படம் வெளியானது. பிற்காலத்தில் தமிழ்நாட்டை ஆளப் போகிறோம் எனத் தெரியாமலே எம்ஜிஆர் பாடிய ‘நானே போடப்போறேன் சட்டம்’ என்ற வரிகளும் உண்மையானது..நாடோடி மன்னனாக நடித்த எம்ஜிஆர், நாடாளும் மன்னனாக மாறியது வரலாறு.









