பாஜகவினருடன் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் கைது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பாஜக ஆய்வுக் குழுவினர் சந்தித்து இன்று மனு அளித்தனர். பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ள அக்கட்சியின் விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் அமா் பிரசாத் ரெட்டி மேலும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா தலைமையில் சத்யபால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அமைத்து உத்தரவிட்டார்.
இந்த குழு இரண்டு நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வந்தது. பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டில் ஆய்வு செய்த குழு, பின்னர் ஆளுநர் ஆர். என். ரவியை கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளது.
அதில், தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாகவும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் இரண்டு நாள்கள் தமிழகத்தில் ஆய்வு செய்த அறிக்கையை நாளை டெல்லி சென்ற பின்னர் தேசிய தலைமையிடம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “திமுக பொய் வழக்கு தொகுப்பு” என்ற பெயரில் ஒரு பெட்டியில் 409 வழக்குகள் குறித்த தொகுப்பு உள்ளது அதனை தேசிய தலைமையிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், ஆளுநரை சந்தித்த பிறகு அக்குழுவினர், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா பேசியதாவது:
கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் கூட இது போன்ற நிலை இருந்தது, அதனை எங்கள் தலைவர்கள் சரி செய்து விட்டனர், இப்போது தமிழகத்தில் அதே போல் நடக்கிறது.
தமிழக முதலமைச்சருக்கு சொல்லிக் கொள்கிறேன் எங்கள் கட்சியினருடன் விளையாட வேண்டாம், அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசிய நெடுஞ்சாலையில் ஆறு கட்சி கொடிகள் வரை உள்ளது. ஆனால் வீட்டின் காம்பவுண்ட் அருகில் கொடி நட அனுமதி மறுக்கபடுகிறது . இது மாதிரியான அரசியல் விளையாட்டை பாஜகவினர் மீது இந்த அரசு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது, இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்து உள்ளோம்.
கொடி கூட நடவில்லை, வெறும் கம்பத்தை அகற்ற 10 நிமிடங்களில் ஆணையர் வருகிறார், அவர் திமுகவின் ஏஜெண்ட்டாக உள்ளார் என்று தெரிகிறது. மாநில அரசு தோற்றுவிட்டது. இங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களை தேசிய தலைவரிடம் கொடுப்போம், திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதனை அடுத்து உள்துறை அமைச்சரிடம் கொண்டு செல்வோம்.
இவ்வாறு சதானந்தா கவுடா கூறினார்.







