ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்- அண்ணாமலை

ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தமிழ்நாட்டிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் தனது உயிரை மாய்த்துக்…

ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தமிழ்நாட்டிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நேற்று திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட மசோதா முக்கியமானது. ஆளுநர் கூறியுள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் சட்டத்துக்கு உட்பட்டு மசோதா நிறைவேற்ற வேண்டும். தமிழக பாஜக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரானது. மீண்டும் அனுப்பினால் ஆளுநர் கையெழுத்து போட வேண்டியதாக இருக்கும்.

ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளார் என கூறுவது தவறானது. ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையானவர். ஆளுநர் மீதான குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுநரை சில ஆன்லைன் நிறுவன அதிகாரிகள் சந்தித்தனர். அவர்கள் சட்ட அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தனர். ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் என அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.