தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்க வேண்டாம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!!

தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…

தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை உயர்வால் சில உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளில் இனி தக்காளியை பயன்படுத்தமாட்டோம் என அறிவிக்கும் அளவிற்கு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.

தக்காளி விலை ஏன் அதிகமாக உள்ளது?

தக்காளி அறுவடை காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உச்சத்தில் இருக்கும். பொதுவாக ஜூலை-ஆகஸ்ட் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தக்காளி உற்பத்தி குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு விளைச்சளிலும் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தக்காளி விலை உயர்வு கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டாலும், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உபரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56%-58% வரை இப்பகுதிகளிலேயே உறுபத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகள் உற்பத்தி பருவங்களின் அடிப்படையில் மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு தக்காளி கிடைக்கிறது.

இப்போது மலையும் அதிகரித்துள்ளதோடு, விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் அதிக போக்குவரத்து இழப்புகள் ஆகிய கூடுதல் சிக்கல்கள் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளன. இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் ரூ.22 ஆக இருந்த தக்காளி விலை இந்த ஆண்டு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் பாஜக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தக்காளி என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை வரைபடமாக குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்துகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், மத்திய அரசு உடனே தலையிட்டு உணவுப்பொருள் & இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.