உலகம் முழுவதும் பேச்சாகக் கிடக்கிறது கிரிப்டோகரன்சி பற்றி. டிஜிட்டல் வடிவ கரன்சி என்றும் வெர்ச்சுவல் கரன்சி என்றும் சொல்லப்படும் இந்த கரன்சிகள், அனைத்து நாடுகளிலும் செல்லத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. பிட்காயின், எத்திரியம், ட்ரோன், ஷிபா உட்பட ஏராளமான கிரிப்டோகரன்சிகள், தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கூடவே இந்த கரன்சி மீது பல்வேறு நாடுகள் சந்தேகக் கண்களையும் வைத்துள்ளன. பல நாடுகள் இதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. உலகின் முதல் பிட்காயின் நகரத்தை கட்டமைக்க போவதாக எல் சால்வடார் நாடு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கியூபாவும் இந்த கிரிப்டோவை அங்கீகரித்திருக்கிறது.
இந்தியாவில், கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று விளம்பரங்கள் வெளியாகின்றன. இந்த கரன்சிகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இங்கு விதிக்கப்படவில்லை. இந்நிலையில், கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை, டிஜிட்டல் கரன்சி மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி, பொருளாதார ஆலோசகர் சோம வள்ளியப்பனிடம் கேட்டோம்.
’’2009 ஆம் ஆண்டு உலக அளவில் முதல் கிரிப்டோகரன்ஸி பிட்காயின் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் அது வருவதற்கு 2014-15 ஆகிவிட்டது. அதைச் சுற்றி பெரிய வர்த்தக உலகம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. நகர்புறத்தில் படித்தவர்களிடம் மட்டும் இருந்த இந்த கிரிப்டோகரன்சி, இப்போது மெள்ள மெள்ள பரவி அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டது. சின்ன ஊர்களில் கூட முகவர்கள் இருப்பதாக தெரிகிறது. சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குவதாகவும் ஒரு கோடி பேர், இதில் கணக்கு வைத்து ஆபரேட் பண்ணிகொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மத்திய அரசு இவ்வளவு தாமதமாக கையில எடுத்திருக்கிறது. இதில் தடாலடியாக ஏதும் நடவடிக்கை எடுத்து தடை செய்தால், பண மதிப்பு அதிகம் குறைந்துவிடும். அதனால், கவனமாக செயல்பட வேண்டிய ஒன்று.
மொத்தத்தில், இன்றைக்கு இல்லை என்றாலும் சில வருடம் கழித்து, ’கிரிப்டோகரன்சியில் இவ்வளவு பணம் போனது தப்பு, இவங்க அப்படிப் பண்ணிட்டாங்க, அவங்க இப்படி பண்ணிட்டாங்கன்னு அது தவறு’ என்பது போல பிறகு கண்டுபிடிக்கப்படும். அப்போதும் இந்த நிலைமைதான் வரப்போகிறது. எந்த பயனும் இல்லாத, பணபரிமாற்றத்துக்கு இது உதவும் என்று சொல்கிற , அந்த பொருள் பெயரிலேயே பல்வேறு பொருள்களை உருவாக்கி, இன்றைக்கு வர்த்தகம் பண்ணுவது, குறுகிய காலத்தில் லாபம் ஈட்டுவதற்கான ஆசையை தூண்டி பண்ணும் வேலைதான். பலருக்கும் கடந்த ஆண்டு லாபம் வந்திருக்கலாம். ஆனால், அது நிலையானதல்ல. என்றைக்காவது ஒரு நாள் பெரிய சிரமம் வரக்கூடும். அதனால் எளிய மக்கள் பெரிய கனவோடு இதற்குள் போக வேண்டாம்.
பல்வேறு நாடுகள் இதை அங்கீகரிலையே?
அங்கீகரிக்கறது என்றால், இதைச் சுற்றி சரியான வரைமுறைகள் இன்னும் உருவாக்கப் படவில்லை. இது புதிதாக வந்திருக்கிறது. பல நாடுகளில் வாங்கி விற்கிறார்கள். அரசை பொறுத்தவரை, ’வியாபாரம் பண்ணினா, லாபம் வந்தா வரி கட்டு, யாரையும் ஏமாற்றாதே’ என்றுதான் சொல்வாங்க. ’இந்தப் பொருள் வாங்கினா, இது விலையேறிடும், அப்புறம் இறங்கிடும். ஜாக்கிரதையா இரு’ என்று அரசு சொல்லாது. அதை தெரிந்துதான் மக்கள் வாங்குகிறார்கள். வர்த்தகத்தில் லாபமும் வரும், நஷ்டமும் வரும். அப்படித்தான் எந்த அரசும் இதைப் பார்க்கிறது. அங்கீகாரத்துக்கு பல்வேறு விதங்கள் இருக்கிறது. தடை செய்யப்படாததை அங்கீகாரம் என்று நினைக்கிறோம். அதனால் கிரிப்டோகரன்சியை பொறுத்தவரை இப்போது நிச்சயமற்ற தன்மைதான் இங்கு இருக்கிறது.

ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த இருக்கிறதா சொல்றாங்களே?
டிஜிட்டல் கரன்சி வேறு, கிரிப்டோகரன்சி என்பது வேறு. டிஜிட்டல் கரன்சி என்பது நம் ரூபாயை எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் பண்ணுவது. கிரிப்டோகரன்சி என்பது எலக்ட்ரிகல்ல மைனிங் செய்து எடுக்கும் புதுவிதமான, லிமிடெட் பொருள். ஆனால், அரசு எதை சொல்கிறது என்று தெரியவில்லைலை. புதிதாக ஒரு கிரிப்டோகரன்சி பண்ணப் போகிறார்களா என்று தெரியவில்லை. அதனால் இப்போதைக்கு அதுபற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
-ஏக்ஜி









