மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்த சூழலில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள்கள் விலக்கு அளிக்கிறது. இந்த குறுகிய கால நடவடிக்கை ரஷ்ய அரசாங்கத்திற்கு நிதி நன்மையை வழங்காது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“ரஷ்யாவிலிருந்து இந்தியா 30 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் அனுமதி தேவை?
விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா மூழ்கடித்ததும் கவலையளிக்கிறது. பன்னாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்த ஒரு கப்பல் அத்தகைய தாக்குதலை சந்திக்கும் போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ இருக்க முடியாது.
இந்தியாவின் நீண்டகால மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் பாரம்பரியத்தில் மத்திய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்ததாகத் தெரிகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.







