தொழில் முனைவோராக ஆசையா? ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு – ஐக்கிய அரபு அமீரகத்தின் சூப்பர் திட்டம்

சுயதொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், சுயதொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு…

சுயதொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், சுயதொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு முழுவதும் பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வகை தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் துபாயின் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். தனது நாட்டு மக்களுக்காக சீர்திருத்த சமூக நலத் திட்டங்களை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து வந்த நிலையில், இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து துபாய் அரசர் ஷேக் முகம்மது தனது ட்விட்டர் பக்கத்தில், “சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு, ஓராண்டு முழுவதும் பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. நம் நாட்டின் பொருளாதாரம் வழங்கும் மாபெரும் வணிக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நமது இளைஞர்களை ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.