ஜெயிலர் திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக (வர்மா) திரையில் தோன்றி கலக்கியிருக்கும் நடிகர் விநாயகனுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி இன்றுவரை ரூ.350 கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் பிற மொழி பிரபல நடிகர்கள் நடித்ததால் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் தன் எதார்த்த நடிப்பால் கொடூரமான வில்லனாக (வர்மா) திரையில் தோன்றிய நடிகர் விநாயகன் சமூகவலைதளங்களில் பிரபலமாக பேசப்படுகிறார். ஆனால் முதலில் வர்மா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மம்முட்டியிடம் பேசப்பட்டதாகவும், சில காரணங்களால் மம்முட்டி நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விநாயகனை இயக்குநர் நெல்சன் அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தில் மம்முட்டியும் இணைந்திருந்தால் படத்தின் கொண்டாட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.







