வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற பழமையான இனிப்பு வகையான மால்புவா புதிய பரிமாணத்தை பெற்று வருகிறது.
வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ‘ஹோலி’. தீய சக்திகளை நல்லவை வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்ட நாளான ‘ஹோலி’ பண்டிகையின் சிறப்பே, வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தெருக்களில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுதான். இது தவிர இந்த பண்டிகையின் போது இனிப்பு
மற்றும் காரமான உணவுகள் தயாரிக்கப்பட்டு தங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் குறிப்பாக, குஜியா, மால்புவா, ஷகர்பரா, தஹி வாடா போன்ற உணவுகள் பெரும்பாலானவகள் இந்த காலங்களில் விரும்பி உண்ணும் உணவுகள். இதில் மால்புவா இனிப்பு உணவிற்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு, காரணம் மனிதகுல வரலாற்றில் மிகவும் பழமையான இனிப்புகளில் மால்புவாவும் ஒன்று என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில், உணவு வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி,
இது முதன்முதலில் ரிக் வேதத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் அந்த சமயம் அதற்கு “அப்புபா” என்று பெயர் இருந்ததாம். இது பார்லி மாவுடன் தயாரிக்கப்பட்டு, நெய்யில் வறுக்கப்பட்ட தட்டையான கேக்குகளாக வடிவமைக்கப்பட்டு, பரிமாறும் முன் தேனில் குழைத்து உணவாக உட்கொள்ளப்பட்டதாம். பல ஆண்டுகளாக இந்த இனிப்பின் அமைப்பு உருமாறினாலும், தயாரிப்பு மற்றும் படி முறைகள் அப்படியே இருந்து வந்தனவாம்.
அதே போல், இலக்கியப் படைப்புகளின்படி, கிபி இரண்டாம் நூற்றாண்டில், “அப்புபா” கோதுமை மாவு, பால், தெளிக்கப்பட்ட வெண்ணெய், சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களான ஏலக்காய், மிளகு மற்றும் இஞ்சி போன்ற பிற பொருட்களால் செய்யப்பட்டது. அந்த சமயம் இதற்கு பூபாலிகா என்ற பெயரும் இருந்ததாம். இப்படி பல வரலாறுகளை கொண்ட ‘மால்புவா’ தற்போது எப்படி தயாரிக்கப்படுகின்றது எனில், சக்கரை
பாகு காய்ச்சி அதை தனியாக வைத்துக் கொண்டு… பின் அதனுடன் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர் , பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கி, அந்த கலவையை 3-4 மணிநேரம் ஊற வைத்த பிறகு, அதனை பதமான முறையில் எண்ணெயில் வறுத்தெடுப்பதன் மூலமே இனிப்பான அந்த உணவு நமக்கு கிடைக்கிறது.
இது தவிர, கலாச்சார தாக்கங்கள் மற்றும் புது புது முயற்சிகளின் விளைவாக தற்போது
இந்த இனிப்பு பல மாறுதல்களை பெற்றுள்ளது. இஸ்லாமிய சமையலில் முட்டை மற்றும் மாவாவைக் கொண்டு மால்புவா செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இதனுடன் தண்ணீர் அல்லது பாலுடன் பிசைந்த பழுத்த வாழைப்பழங்களையும்
பயன்படுத்துகிறார்கள். ராஜஸ்தானில், மால்புவாவை ரப்தியுடன் சேர்த்து பரிமாறுகிறார்கள். இது இப்படி என்றால் நவீன யுகத்தில் ஓட்ஸ் மற்றும் பாதாம் மாவு சேர்த்து, சர்க்கரைக்குப் பதிலாக மேப்பிள் சிரப்பும் மாற்றப்பட்டு ‘மால்புவா’ புதிய பரிமாணத்தை பெற்று வருகிறது. எது எப்படி இருந்தாலும் ‘மால்புவா’வில் பயன்படுத்தப்படும் பொருட்களும், அமைப்பும் மாற்றம் அடைந்திருந்தாலும் அதன் வரலாறு என்றுமே மாறாதது.
- பி.ஜேம்ஸ் லிசா