அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் கைதான ஹரிஷின் வங்கிக் கணக்கை முடக்க காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்தது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஆசிய திரைப்பட விருதுகளை அள்ளி வருமா பொன்னியின் செல்வன்?
இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரீஷ், ஆம்பூரில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஹரிஷின் வங்கி கணக்கை முடக்க காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். ஹரிஷின் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், இதுவரை 50 நபர்களுக்கு போலியாக அவர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








