உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நாட்டில் இந்தி மொழியை திணிப்பது உள்ளிட்ட தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி குறித்து அவ்வப்போது, சர்சைகள் எழுந்து வருகிறது. மேலும் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ் இருவரும் ட்விட்டரில் இந்தி மொழி குறித்து கருத்து பரிமாறி கொண்டனர். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், பாடகர் சோனு நிகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பீஸ்ட் ஸ்டுடியோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷாந்த் மேத்தாவுடனான உரையாடலின் போது பேசிய பாடகர் சோனு நிகம், நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அந்த மொழியை திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஏன் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்று இந்தி மொழியை யாரும் குறிப்பிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இது குறித்தும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது எனக்குப் புரிகிறது. அதே சமயம் உலகத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும் நாம் அறிவோமா? உலகின் பழமையான மொழி எது என்று சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது.உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள் என்றும் அவர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்திய நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். மக்கள் எந்த மொழியை பேச விரும்புகிறார்களோ அந்த மொழியை பேச அவர்களை முடிவெடுக்கவிடுங்கள் என்றும், அவர்கள் பேச விரும்பும் மொழியை முடிவு செய்யுங்கள்” என்று சோனு நிகம் தெரிவித்துள்ளார். 32 மொழிகளில் பாடிய தான், ஒரு விமான பயணத்தின்போது, இந்தியில் பேசியதாகவும், அதற்கு விமான பணிப்பெண் தனக்கு ஆங்கிலத்தில் பதிலளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.







