தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பான்மையானவை மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் கருத்து கணிப்புகளில் தவெக குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை பெற்றிருந்தது. மேலும் சில கருத்து கணிப்புகளில் தவெக ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறி இருந்தன.
இந்த நிலையில் இன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன். இதுவரை நன்றாக பணிபுரிந்துள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கை நாளில் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சிலர் பாஜகவில் சேர்ந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையொட்டியே கட்சி தாவல் செய்து விடாதீர்கள் என்னும் படி விஜய் பேசியதாக கூறப்படுகிறது.







