நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மகுடமாக சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சி, தமிழ்நாட்டின் பணக்கார மாநகராட்சி என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய் சொத்து வரி வசூல், 2,500 கோடி ரூபாய்க்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் என சென்னை மாநகராட்சி திகழ்கிறது. இந்த மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் 2,670 வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதன் முடிவில்தான் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் திமுக 167 வார்டுகளில் போட்டியிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 6 இடங்களிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும் போட்டியிட்டன. அதிமுக 200 வார்டுகளிலும் களம் இறங்கியது. நாம் தமிழர் கட்சி 199 இடங்களிலும், பாஜக 198 வார்டுகளிலும் போட்டியிட்டன. பாமக, அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்கிய சென்னை மாநகராட்சியில்தான் திமுக வாக்குகளை அள்ளி அமோக வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 22 சட்டப்பேரவை தொகுதிகள், 3 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் அனைத்திலும் திமுகவே வெற்றி பெற்றது. எனவே மக்கள் பிரதிநிதிகள் வாக்கு சேகரித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மிகவும் குறைந்த வாக்குகளே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவானது.
43.59 சதவீத வாக்குகளே பதிவான நிலையில் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், திமுகவிற்கு அமோக வெற்றியை மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக திமுக சார்பில் 136 வது வார்டில் போட்டியிட்ட, 22 வயது இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக பதவி வகித்த சென்னை, மீண்டும் திமுக வசம் சென்றுள்ளது.







