‘2026-ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்’ – முன்னாள் அமைச்சர்

திமுக அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 இலட்ச…

திமுக அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 இலட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார். நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டுமே செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் மேயர் எந்தவொரு பணிகளையும் செயல்படுத்தவில்லை எனத் தெரிவித்த அவர், மதுரை மாநகராட்சி இயங்குதா? இயங்கவில்லையா எனத் தெரியவில்லை எனக் கூறினார். மேலும், தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது எனத் தெரிவித்த அவர், திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசி வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும், சினிமாத்துறை உதயநிதி கையில் உள்ளது எனத் தெரிவித்த அவர், உதயநிதிக்குப் படம் வழங்காததால் பல படங்கள் முடங்கிக் கிடக்கிறது எனத் தெரிவித்த அவர் சபரீசன் கண் பார்வைக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள் எனக் கூறிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார், மக்களைக் கவனிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘மகாராஷ்டிரா, பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் அரசியல் குழப்பம்?’

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. இபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இறக்கிறார்கள். திமுக அரசு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எனக் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் சிங்கமாகச் செயல்படுவதாகக் கூறும் முதலமைச்சர், பிரதமரை சந்திக்கும் போது பணிந்தும் செயல்படுகிறார் எனத் தெரிவித்த அவர், முதலமைச்சர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காகச் சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

திமுக எங்களுக்குப் பங்காளி உறவுமுறை எனத் தெரிவித்த அவர், தரம் குறைந்து பேசும் அரசியல்வாதிகள் நீடித்துச் செயல்பட்டதில்லை. 2026-ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும். 2026-ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.