வரதட்சணை தராத ஆத்திரம்; மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன்

வரதட்சணை தராத ஆத்திரத்தில் மாமியார் வீட்டை மருமகன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு புதிய சம்பத் நகரைச் சேர்ந்தவர் வேம்புலி.தனது கணவர் சந்திராச்சாரி இறந்துவிட்ட நிலையில்…

வரதட்சணை தராத ஆத்திரத்தில் மாமியார் வீட்டை மருமகன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு புதிய சம்பத் நகரைச் சேர்ந்தவர் வேம்புலி.தனது கணவர் சந்திராச்சாரி இறந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ராஜி, ஷோபனா, கல்பனா என மூன்று மகள்கள் உள்ளனர். பெரிய மகள் ராஜி திருமணமாகி சென்னை திருமங்கலத்தில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் ஷோபனா திருமணமாகி தனது தாய் வேம்புலி வீட்டின் அருகே குடியிருந்து வருகிறார். வேம்புலியின் மூன்றாவது மகள் கல்பனா திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பட்டறை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கல்பனாவின் கணவர் குடி போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு வரதட்சணை கேட்டு மனைவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 11ம் தேதி ஆட்டோ வாங்குவதற்கு முன் தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி மனைவி கல்பனாவை அடித்துத் துன்புறுத்தியதுடன் ஈக்காடு புதிய சம்பத் நகர்ப் பகுதியில் வசிக்கும் கல்பனாவின் தாய் வேம்புலியுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சரவணன் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வேம்புலியின் வீட்டு அருகே குடியிருந்த ஷோபனாவின் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் வீட்டினை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி வீட்டிலிருந்த 4 சவரன் தங்க நகை மற்றும் 43 இன்ச் எல் இடி டிவியை சரவணன் திருடி சென்றுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று மாலை வேம்புலி வீட்டினை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுடன் மின்சாதன பொருட்களையும் கொளுத்தியுள்ளார். இதனை வீட்டின் அருகிலிருந்தவர்கள் பார்த்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

2 வீடுகளை பெட்ரோல் ஊற்றி எரித்து மாமியார் வேம்புலியையும் கத்தியால் வெட்டிய மருமகன் சரவணன் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சரவணன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. புகார் அளித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது இத்தகைய அசம்பாவித சம்பவம் நிகழக் காரணம் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.