அதிமுக ஒன்றுபட வேண்டுமென திமுக விரும்புகிறது. அதனால் தான் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள்
விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், ”மராட்டிய மாநிலத்தில் வில்லுக்கும் அம்புக்கும் சண்டை நடப்பது போல் தமிழகத்தில் இரட்டை இலைக்கு சிக்கல் வர வேண்டுமென மத்திய பாஜக காத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அதிமுக ஒன்றுபட வேண்டுமென திமுக விரும்புகிறது. அதனால் தான் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்தார்.
இதே போல் இந்தியா முழுவதும் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தேவை தமிழகத்தோடு நின்று போவதில்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவைப்படும் காலம் இது என பிரபல அரசியல் விமர்சகர் தெரிவித்துள்ளார்” என்று பேசினார்.







