“சாதுக்கள், சன்னியாசிகளை திமுக அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள். திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு குழப்பமான ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் விளக்கப்
பொதுக்கூட்டம் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சமீபகாலமாக சாதுக்கள், சன்னியாசிகள் ஆகியோரை திமுக அமைச்சர்கள்
மிரட்டுகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறை, கோயில் உண்டியல்களை குறிவைத்து
நடந்துகொள்கிறது. திராவிட மாடல் அரசு என கூறிக்கொண்டு குழப்பமான ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். சமீபத்தில் திமுக அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்து நான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஜி ஸ்கொயர் விவகாரத்தில் திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். தா.மோ. அன்பரசன் அமைச்சர் பதவி பிரமாண மரபை மீறி தனிநபர் விமர்சனம் செய்கிறார். திமுக தலைமையிலான தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதற்கு நன்னிலம் பகுதியில் மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில் நடந்த ஊழலே தெளிவாகக் காட்டுகிறது. இதுபோன்ற திமுக அரசின் முறைகேடுகளை பொதுமக்கள் தட்டி கேட்க வேண்டும்.

பொதுமக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் எளிதாக கிடைத்திட பாஜக சார்பில்
மத்திய அரசு திட்டம் என்ற பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மத்திய அரசின் திட்டங்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பிரிதி என்ற கிராமத்தில் திமுக
குண்டர்கள் பாஜக நிர்வாகி விஸ்வநாதன், மற்றும் அவரது தாயார் ஆகியோர் மீது
கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து பாஜக அறவழி போராட்டங்களை
நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை காவல் துறையும், அரசு நிர்வாகமும் உரிய நடவடிக்கை
எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை. எனவே இதனை மாநிலம் தழுவிய அளவில் பிரச்னையாக எடுத்துச்சென்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் என்னுடைய தலைமையில் முற்றுகையிடும் போராட்டத்தை வருகின்ற ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடத்த உள்ளோம். எனவே அதற்கு முன்பு இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: பாஜக நிர்வாகிக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான பாஜக
உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும். நாமக்கல்லில் இருந்து ஒரு பாஜக நாடாளுமன்ற
உறுப்பினர் வரவேண்டும். இதற்கு பொதுமக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
-மணிகண்டன்







