பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வாசனை திரவிய விளம்பரங்களை ட்விட்டர் மற்றும் யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடும் வாசனை திரவிய விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளது. டிஜிட்டல் ஊடகத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில் அந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன. மேலும், பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த வீடியோக்கள் அமைந்துள்ளன.
லேயர் ஷாட் எனும் வாசனை திரவிய நிறுவனத்தின் விளம்பர வீடியோக்கள் மிக மோசமான வகையில் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து மத்திய அமைச்சகத்துக்கு பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரங்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக சமூக வலைதளப் பயனாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, யூடியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனம் பெண்களுக்கு எதிரான அந்த வீடியோ விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








