பாஜக நிர்வாகிக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்

பாஜக மாநில செயலாளராக உள்ள சிவக்குமார் என்பவருக்கு மர்ம நபர்கள் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பஞ்சமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர்…

பாஜக மாநில செயலாளராக உள்ள சிவக்குமார் என்பவருக்கு மர்ம நபர்கள் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பஞ்சமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் பாரதீய ஜனதா கட்சியில் மாநில செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப்க்கு இன்று காலை முதல் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நீ என்று குறிப்பிட்டு கழுத்தை அறுப்பது போன்ற புகைப்படங்கள் அனுப்பி மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பாரூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மனுவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வந்திருப்பதாகவும், அனைத்து அலைபேசி எண்களும் வெவ்வேறு நாடுகளுடையதாக இருப்பதால் யார் அனுப்புகிறார்கள் என குழப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த சிவக்குமார், பாஜக மாநில செயலாளராக இருந்த சேலம் ஆடிட்டர் ரமேஷ், கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி இதேபோல் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் வந்த நிலையில் கொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கொலை செய்தனர். அதேபோல் நடந்துவிடுமோ என்கிற அச்சம் உள்ளது என தெரிவித்தார்.

 

எனவே காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டும், கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க கோரியும் புகார் மனு அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதேபோல் மின்டிகிரி கிராமத்தை சேர்ந்த பாஜக மாவட்டச்செயலாளர் மாதேஷ் என்பவருக்கும் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அவர் மத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.