தொகுதி மறுவரையறை: மத்திய அரசுக்கு ஜோதிமணி கடும் எதிர்ப்பு!

132வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மூலம் இந்தியாவின் அரசியல் அதிகாரச் சமநிலையையும் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் மாற்றியமைக்க பாஜக அரசு முயற்சிப்பதாகவும், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு குறையும் அபாயம் இருப்பதாகவும் ஜோதிமணி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தொகுதி மறுவரையறை மூலம் அரசியல் அதிகாரச் சமநிலை பாதிப்பு!

“132வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவைப் படித்தேன். நாம் அஞ்சிய மிக மோசமான அச்சங்கள் உண்மையாகியுள்ளன. இது வெறுமனே தொகுதி மறுவரையறை (Delimitation) செய்யும் நடவடிக்கை மட்டுமல்ல. இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை. இதன் விளைவுகள், பல தலைமுறைகளுக்கு இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடியவை.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) மூலம் வாக்காளர் பட்டியலில் ஊழல்,இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும் நம்பகத்தன்மையும் சமரசம் செய்யப்பட்டுள்ள சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி மறுவரையறை தேர்தல் முடிவுகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றியமைப்பதற்கான பாஜகவின் மற்றுமொரு கருவி என்பது தெளிவு. மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் அரசியல் அங்கீகாரத்தைப் பெற முடியாத பாஜக – மோடி அரசு, ஜனநாயகக் கட்டமைப்பையே மாற்றியமைத்து தனக்குச் சாதகமான தேர்தல் ஆதாயத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது.

தமிழ்நாடு, தென்னிந்தியாவின் அரசியல் வலிமை குறையுமா?

இது தமிழ்நாட்டிற்கு எத்தனை கூடுதல் தொகுதிகள் கிடைக்கின்றன என்ற கேள்வி மட்டுமல்ல. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடும் தென்னிந்திய மாநிலங்களும் தங்களின் அரசியல் அதிகாரத்தில் எவ்வளவு இழக்கப்போகின்றன என்பதுதான் உண்மையான பிரச்சினை. உத்தரப் பிரதேசத்தின் மக்களவைத் தொகுதிகள் 80-லிருந்து 120 ஆக உயரும் நிலையில், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-லிருந்து சுமார் 59 ஆக உயரும். இதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வேறுபாடு 41-லிருந்து 61 ஆக அதிகரிக்கும். ஏற்கெனவே நிலவும் அரசியல் அதிகாரச் சமநிலையின்மை எவ்வாறு மேலும் அதிகரிக்கப்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

இதன் விளைவுகள் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையோடு முடிந்துவிடுவதில்லை. நாடாளுமன்றத்தில் யாருடைய குரல் வலிமையாக ஒலிக்கும், யாருடைய கருத்துக்கள் தேசியக் கொள்கைகளைத் தீர்மானிக்கும், யாருடைய முன்னுரிமைகள் நாட்டின் செயல்திட்டத்தை வகுக்கும், நாட்டின் வளங்கள் மற்றும் எதிர்காலம் குறித்த முடிவுகளில் யாருக்கு அதிக அதிகாரம் இருக்கும் என்பதுதான் இங்குள்ள அடிப்படையான கேள்வி. தென்னிந்தியாவின் அரசியல் பேரம் பேசும் வலிமை, பொருளாதார நலன்கள், தேசிய முடிவெடுக்கும் செயல்முறையில் அதன் பங்களிப்பு மற்றும் செல்வாக்கு என அனைத்தும் இன்று கேள்விக்குறியாகியுள்ளன.

கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, மக்கள்தொகை நிலைப்படுத்தல் ஆகியவற்றில் பொறுப்புடன் முதலீடு செய்து சாதித்த மாநிலங்கள், அதற்காகத் தண்டிக்கப்படக் கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கான அவற்றின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், தேசிய அளவில் அவற்றின் அரசியல் குரல் படிப்படியாகப் பலவீனப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாநிலத்திற்கு மொத்த எண்ணிக்கையில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதன் அரசியல் வலிமை குறையக்கூடும். இதுதான் இந்த நடவடிக்கையின் அடிப்படையான ஆபத்து. நாட்டின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் ஒட்டுமொத்தப் பிராந்தியங்களையே படிப்படியாகப் புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளும் அபாயம் இதில் உள்ளது. நமது குரல்களின் வலிமை குறையும்; நமது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது; கூட்டாட்சித் தத்துவத்தின் அதிகாரச் சமநிலை படிப்படியாகச் சிதைக்கப்படும்.

பெண்கள் இடஒதுக்கீட்டை காரணமாகக் காட்டுவதா?

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் 106வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், மக்களவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும், மாநிலச் சட்டமன்றங்களின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான அரசியலமைப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்; நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு 50 சதவீதம் தொகுதிகளை அதிகரிப்பதோ, புதிதாகத் தொகுதி மறுவரையறை செய்வதோ முன்நிபந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற உயரிய நோக்கத்தை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி, நாட்டின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பையே மாற்றியமைக்க முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஜனநாயகம், கூட்டாட்சியைப் பாதுகாப்பது அனைவரின் கடமை!

இந்த நாட்டின் ஜனநாயக அதிகாரச் சமநிலையை அரசியலமைப்புச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைப்பதன் மூலம் சீர்குலைக்க எந்த அரசுக்கும் மக்களால் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும், இந்த மகத்தான நாட்டின் மீது நம்பிக்கையும் அக்கறையும் கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்புக் கடமையும் பொறுப்பும் உள்ளது. இது அரசியல் வசதிக்கான பிரச்சினையோ, கட்சி நலன்களுக்கான பிரச்சினையோ அல்ல. இது இந்தியாவின் எதிர்காலம் குறித்த பிரச்சினை.

சில மாநிலங்களின் அரசியல் குரலைத் தொடர்ந்து பலவீனப்படுத்திக்கொண்டே ஒரு நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியாது. மாநிலங்களிடமிருந்து சமமான பொறுப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்த்துக்கொண்டு, அவற்றை ஆளும் முடிவுகளை எடுப்பதில் அவற்றின் செல்வாக்கைக் குறைக்க முடியாது. இத்தகைய அணுகுமுறை அவநம்பிக்கையை உருவாக்கும்; பிரிவினைகளை ஆழப்படுத்தும்; இறுதியில் நமது ஒன்றியத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும். இது இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான தருணம்.இந்த மகத்தான நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடித்தளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் தருணத்தில், மௌனமாக இருந்தவர்களையும், தங்களின் பொறுப்பைக் கைவிட்டவர்களையும், அரசியலமைப்பைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து பின்வாங்கியவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.