சமூக நீதி பேசும் திமுக, குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பாஜக ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை ஈவிஆர் சாலையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அண்ணாமலை பேசியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பதைத் தவிர திமுகவிற்கு வேறு வழியில்லை. தமிழக முதலமைச்சருக்கு மோடியைப் போல ஆக வேண்டும் என ஆசை. ஆனால், அதற்கு மோடியை போல், கடினமாக அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும். கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவை எப்போது பாஜக அறிவித்தோ அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. சமூக நீதி பேசும் திமுக, குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுக்க முடியாமல் திணறி வருகிறார். தமிழகம் கஞ்சா தலைநகராக மாறியுள்ளது. இதனால், இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்கையை இழந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளைகளுக்கு கஞ்சா தான் காரணம் என்றார் அண்ணாமலை.
இவரைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் கூவத்தை சீரமைப்பதாக கூறினார். ஆனால் கூவத்தை சீரமைக்க அவர் தயாராக இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை இதுவரை வழங்காததற்கு பொதுமக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.








