பேரறிவாளன் விடுதலையை திமுக தங்களுக்கு கிடைத்த வெற்றியாக சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் 142 விதியை பயன்படுத்தி இன்று விடுதலை செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு திமுக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரறிவாளன் விடுதலையை திமுக உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை திமுக தங்களுக்கு கிடைத்த வெற்றியாக சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா இருக்கும் போதே, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்ததாக கூறினார்.
அரசு தீர்வு காண்பதற்காக என் தலைமையில் சட்டசபை கூட்டப்பட்டு பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன் விடுதலையை திமுக தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது என சாடினார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவருடைய தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நளினி குழந்தைபெறவேண்டிய காரணத்தாலே அவருக்கான தண்டனையிலிருந்து குறைத்து ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால் குழந்தை பெற்றபின்பு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதாக உயிருடன் இருக்கும்போதும், அவர் மறைவிற்கு பிறகும் அதிமுகவின் நிலைபாடு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே என விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, மற்றவர்களின் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இன்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், பேரறிவாளன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.